கலைஞர் மகளிர் உரிமை திட்ட விவரங்களை அறிய 35 உதவி மையங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 35 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-19 18:45 GMT

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் பெற 24.7.2023 முதல் 4.8.2023 வரை முதல் கட்டமாகவும், 5.8.2023 முதல் 14.8.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்கண்ட இரு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

மேல்முறையீடு செய்யலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த பெண்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு 18-ந் தேதி முதல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக உதவி கலெக்டருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

35 உதவி மையங்கள்

இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், நாமக்கல், திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகங்களில் தலா 3 உதவி மையங்களும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களில் தலா 3 வீதம் 24 உதவி மையங்களும் என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 35 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் புகார்களை ஒருங்கிணைக்க சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் 35 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் உதவியாளர்கள் நிலையில் 35 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மையமானது அரசு வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இம்மையங்களில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆவணங்களுடன் நேரில் சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்