34 நிறுவனங்கள் ரூ.146½ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 நிறுவனங்கள் ரூ.146½ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2023-09-23 18:06 GMT

தொழிற்கடன் வசதியாக்கல் முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முகாமை தொடங்கி வைத்து, 20 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உள்ளூர் வளத்தை பொறுத்து மாவட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியவும், தமிழக அரசின் கடனுதவி திட்டங்களை துடிப்புள்ள தொழில் முனைவோருக்கு எடுத்துச் செல்லவும், படித்த மற்றும் படிக்காத வேலையற்ற இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழிற் கடனுதவி அளித்து தொழில் வளத்தை மேம்படுத்த, தமிழ்நாடு அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என பல்வேறு மானிய கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

2023-24-ம் நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 நபர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதிய முதலீட்டாளர்கள் தொடங்க உள்ள நிறுவனத்திற்கான பிற துறைகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தடையின்மை சான்றுகள் மற்றும் வரைபட ஒப்புதல்களை ஒருமுனை தீர்வுக்குழு மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து விரைந்து பெறலாம்.

அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் மொத்தம் 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் தலைமையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதால் மாநில அளவில் 36 ஆயிரத்து 633 நிறுவனங்கள் ரூ.54 ஆயிரத்து 950 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற்று தொழில் வளத்தை பெருக்குவதே உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாடு-2024-ன் நோக்கமாகும்.

ரூ.146½ கோடி

இதில் மாநில அளவில் 2,683 நிறுவனங்கள் ரூ.19 ஆயிரத்து 850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தமாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 667 நிறுவனங்கள் ரூ.1,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, இதுநாள் வரையில் 34 நிறுவனங்கள் ரூ.146 கோடியே 53 லட்சம் புரிந்துணர்வு ஒப்பந்தமாகியுள்ளது.

எனவே, வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்குள் கடனுதவி திட்டங்களின் இலக்கினை எய்தி மாநிலத்தின் தொழில் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் தொழில் முனைவோர், மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி உள்ளிட்ட கடனுதவிகளை விரைந்து வழங்கிட முன்வர வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு அரசுத் துறைகளின் கடனுதவி திட்டங்கள் மூலம் வங்கிகளின் வாயிலாக 8033 பயனாளிகளுக்கு ரூ.365 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், மகளிர் திட்ட இயக்குனர் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்ஜி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் வி.எஸ்.என்.அமுதாராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அ.கலைகுமார், பி.வடிவேலு, புவனேஸ்வரி சத்தியநாதன், நகர மன்ற தலைவர்கள் ஹரிணிதில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்