நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு108 ஆம்புலன்ஸ் மூலம் 33 ஆயிரம் பேர் பயன்-அதிகாரி தகவல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி சேவையின் மூலம் 33 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி சேவையின் மூலம் 33 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.
ஆம்புலன்ஸ் சேவை
தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயனடையும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது. ஏழை -எளிய மக்களின் நண்பனாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன.
நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை தொடர்பு கொண்ட 8 நிமிடத்திலும் கிராமப்புறங்களை பொருத்தவரை 20 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் சேவை சென்று விடுகின்றன. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஆண்டு மொத்தமாக 33 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட திட்ட மேலாளர் செல்வ முத்துக்குமார் கூறியதாவது:-
உளவியல் ரீதியாக உதவுகிறது
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 37 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரத்து 973 கர்ப்பிணி தாய்மார்கள் 108 அவசர ஊர்தியின் மூலம் பாதுகாப்பாக அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தினால் பாதிக்கப்பட்ட 1328 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 108 அவசர ஊர்தியில் உள்ள அவசரகால மருத்துவ நுட்புணர்களின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே 31 தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.
மேலும் இதய நோய், மூச்சுத்திணறல், காய்ச்சல், விலங்குகளினால் காயம் அடைந்தோர் என 16,672 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்தாண்டு மொத்தமாக நீலகிரி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 4 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.