ரூ.33 கோடியில் சாலை பணிகள்
ரூ.33 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் என்று 3 உட்கோட்டங்கள் உள்ளன. இந்த உட்கோட்டங்களில் சாலை அகலப்படுத்தும் பணி, சிறுபாலங்கள் அமைத்தல், புதிய சாலை அமைத்தல், பழைய சாலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் உட்கோட்டத்தில் ரூ.33 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதற்கட்டமாக அவர் அப்துல்லாபுரத்தில் இருந்து அணைக்கட்டு வழியாக ஆலங்காயம் செல்லும் சாலை, பள்ளஇடையம்பட்டி முதல் நாயக்கனேரி வரை செல்லும் சாலை, நெல்வாய் முதல் பள்ளிகொண்டா வரை செல்லும் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தெள்ளூர் சாலை, அணைக்கட்டு முதல் ஒடுகத்தூர் வரையிலான வனச்சாலை, முத்துக்குமரன் மலைச்சாலை, சேர்பாடி முதல் பனந்தோப்புப்பட்டி வரையிலான சாலைகளில் நிறைவடைந்த சாலை மேம்பாட்டு பணிகளையும் மற்றும் பிற பகுதிகளில் சிறுபாலம், தடுப்புச்சுவர், மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ், உதவி பொறியாளர்கள் விஜயா, அஜித்குமார், பூபதி, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.