ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 33 பேர் கைது

Update: 2023-06-05 16:34 GMT


திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரை பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும், மீண்டும் அதே பதவியில் உதவி இயக்குனராக வள்ளல் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இதற்கு உறுதுணையாக இருக்கும் கனிம வளத்துறை அமைச்சர் மற்றும் கனிம வளத்துறை இயக்குனருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை திரண்டனர். இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கத்தினரும் கலந்து கொண்டு முறைகேடான அதிகாரிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்படி 4 பெண்கள் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்