கரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனறி தேர்வை 3,264 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனறி தேர்வை 3,264 பேர் எழுதினர். 79 பேர் தேர்வு எழுத வரவில்லை
தேசிய திறனறி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நடத்தப்படும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
3,264 பேர் எழுதினர்
நடப்பாண்டிற்கான தேர்வு கரூர் மாவட்டத்தில் நேற்று 12 மையங்களில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், பகல் 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுத 3 ஆயிரத்து 343 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர்.
79 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுக்கான பணிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரே வார்த்தையில் விடை அளித்து அதனை ஓ.எம்.ஆர் விடைத்தாளில் ஷேடு செய்யும் வகையில் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.