கடலூர் மாவட்டத்தில் 32,595 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

கடலூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் பிளஸ்-2 தேர்வை 32 ஆயிரத்து 595 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

Update: 2023-03-12 18:45 GMT

தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 166 மாணவர்கள், 16 ஆயிரத்து 429 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 595 பேர் எழுத உள்ளனர். இதற்காக 125 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு மையங்களில் மாணவர்களின் வரிசை எண் எழுதப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், மின்சாரம் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்பட்டு உள்ளது. தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

ஹால்டிக்கெட்

தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மின்னணு சாதனங்கள் எதுவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

இதேபோல் பிளஸ்-1 தேர்வை 29 ஆயிரத்து 391 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை நடக்கிறது.

தேர்வு மையங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்