கடலில் 32 கி.மீ. நீந்தும் முயற்சியில் மாற்றுத்திறனாளி இளைஞர்

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடியை நோக்கி கை, கால்களில் செயல்திறன் குன்றிய மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று மாலை நீந்த ெதாடங்கினார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Update: 2023-04-12 18:45 GMT

 ராமேசுவரம்,

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடியை நோக்கி கை, கால்களில் செயல்திறன் குன்றிய மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று மாலை நீந்த ெதாடங்கினார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

மாற்றுத்திறனாளி வாலிபர்

சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ் (வயது 29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

ஆனாலும் மனம் தளராமல், 4 வயது முதல் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். நீச்சலில் சாதனை படைக்க எண்ணி தனது நீச்சல் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

ஏற்கனவே கடலூர் அருகே 5 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார்.

சாதனை பயணம் தொடங்கினார்

இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை நீந்தி சாதனை படைப்பதற்காக மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் நேற்று தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவுடன் ராமேசுவரம் சங்குமால் பகுதிக்கு வந்தார். இங்கு இருந்து படகு ஒன்றின் மூலமாக இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.

ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு படகில் புறப்பட்ட இவரது பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் சேக்சலீம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமன்னாருக்கு நேற்று மதியம் சென்றடைந்த ஸ்ரீராம் சீனிவாஸ் நேற்று மாலை 5 மணிக்கு தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்த தொடங்கினார். இரவிலும் தொடர்ச்சியாக நீந்தி, இன்று மதியத்திற்குள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு அவர் வந்தடைவார் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

குவியும் பாராட்டுக்கள்

தலைமன்னார் தனுஷ்கோடி இடையே 32 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை கை, கால்களில் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நீந்தி கடக்க இருப்பது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது முயற்சி வெற்றி அடைய பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்