31-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம்
ராமேசுவரம் கோவிலில் தடுப்பு கம்பிகளை அகற்ற கோரி 31-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மக்கள் பாதுகாப்பு பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமேசுவரத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களும், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கோவிலின் உள்ளே பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை வைத்து பாதைகளை மறைத்துள்ள கோவில் துணை ஆணையரை கண்டித்தும், உடனடியாக கோவிலின் உள்ளே பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தியும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் வரம்பு மீறி பேசும் கோவில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 31-ந் தேதி அன்று ராமேசுவரத்தில் ஒரு நாள் அடையாள பந்த் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒரு நாள் பந்த் போராட்டம் அன்று ராமேசுவரம் பகுதியில் அனைத்து ஆட்டோக்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதென்றும் மற்றும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று ராமேசுவரம் மக்கள் பாதுகாப்பு பேரவையினர் பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டனர்.