1,349 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.38 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,349 மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.38 கோடி கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-01-03 17:15 GMT

கடன் தள்ளுபடி சான்றிதழ்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 1,349 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.38 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் சி.பெ.முருகேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் 1,349 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.38 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசியதாவது:-

முதலிடத்தை நோக்கி

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,025 மகளிர் சுயஉதவிக்குழு உள்ளது. இதில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அனைத்து பெண்களும் திறமையானவர்கள்.

அவர்களில் சில பேருக்கு கல்வி அறிவு குறைவாக உள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான கல்வி வழங்கப்பட்டு வங்கிக்குச் சென்றால் அவர்களே அனைத்தையும் எழுதிக் கொள்ளும் வகையில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் குழுக்குகளுக்கு இதுபோன்ற கடன் தள்ளுபடி, கடன் வழங்குவது போன்றவை 4 தொகுதிகளிலும் தனித்தனியாக நடத்தப்படும். தமிழக முதல்-அமைச்சர் 15 புதிய திட்டங்களை அறிவித்து அதில் 12 திட்டங்கள் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு மாவட்டம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை நோக்கி செல்ல அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, துணைப்பதிவாளர்கள் சுவாதி, நகரமன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் சரக துணை பதிவாளர் பாலசுப்பிமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்