30-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 13.83 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று நடந்த 30-வது மெகா தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-06-12 23:50 GMT

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சம் இடங்களில் 30-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தகுதியானவர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நினைவூட்டல் சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இந்த சீட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் தங்கள் அருகில் உள்ள முகாம்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் பெரும் அளவில் தகுதியானவர்கள் நேற்று தடுப்பூசி போட்டனர்.

மக்களை தேடி சென்று...

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள், போலீசார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மக்களை தேடி மருத்துவம் குழுவினர் மற்றும் தெற்கு ரெயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு, பயனாளிகளை தேடி சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. அந்தவகையில் வார்டுக்கு 8 சுகாதார குழுக்கள் என 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

13.83 லட்சம் பேருக்கு...

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 13 லட்சத்து 83 ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 520 பேருக்கும், 2-வது தவணையாக 10 லட்சத்து 30 ஆயிரத்து 753 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி 1 லட்சத்து 8 ஆயிரத்து 300 பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 94.31 சதவீதமும், 2-வது தவணையாக 84.81 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோல் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 17,62,663 பேருக்கும், 2-வது தவணையாக 10,85,265 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 29,87,648 பேருக்கும், 2-வது தவணையாக 24,23,198 பேருக்கும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயது மேற்பட்டவர்களுக்கு என 13,51,908 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்களில் மட்டும் இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேயர் பிரியா ஆய்வு

சென்னை திருவொற்றியூர் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் நடந்த 30-வது மெகா தடுப்பூசி முகாமை, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்