மீன் பிடிக்க ஏரி மதகை உடைத்ததால் 300 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதம்

மருதாடு கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைத்தனர். இதனால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

Update: 2022-05-28 11:52 GMT

வந்தவாசி

மருதாடு கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைத்தனர். இதனால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

ஏரி மதகு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மாவட்டத்திலேயே 2-வது மிகப்பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் இன்று ஏரியின் மதகை உடைத்து உள்ளனர்.

இதனால் தண்ணீர் வெளியேறி கடைசிகுளம் கிராம பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

மணல் மூட்டைகள்

இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் கூறினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியின் மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை வெளியே வராத அளவிற்கு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி மதகை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்