30 ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசல்

30 ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-03 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் 30 ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகிய சாலை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி என 4 பிரிவு சாலைகள் உள்ளன. இதில், திருவாரூர்- மன்னார்குடி வழித்தடத்தில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை சுமார் 80‌ ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய சாலையாக உள்ளது. இந்த குறுகிய சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி அப்படியே நின்று விடுகின்றன. இதனால், கடைவீதி சாலையை கடந்து செல்ல முடியாமல் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து பல மணி நேரம் நின்றுவிடுகின்றன.

மாணவர்கள் அவதி

வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, 4 வழி சாலைகளிலும் மக்கள் சென்று வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகள் சென்று வரும் மாணவ- மாணவிகள், ஆம்புலன்சுகள், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவலநிலை தொடர்கதையாக நீடித்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்தும் இதுவரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை. லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

ஒருவழிப்பாதை

எனவே, திருவாரூரில்இருந்து வரும் வாகனங்களை லெட்சுமாங்குடி ஏ.ஆர். சாலை வழியாக சென்று, ஆஸ்பத்திரி சாலையை கடந்து லெட்சுமாங்குடி பாலம் வழியாக மன்னார்குடி மற்றும் கொரடாச்சேரி வழித்தடத்தில் செல்லும் வகையிலும், மன்னார்குடியில் இருந்து வரும் வாகனங்கள் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் திருவாரூர் செல்லும் வகையிலும் ஒரு வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்