நர்சு வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

குளச்சல் அருகே நர்சு வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-09-09 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே நர்சு வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனை நர்சு

குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பிள்ளவிளையை சேர்ந்தவர் காட்சன் (வயது41). இவர் கடந்த ஆண்டு வரை வெளிநாட்டில் ேவலை பார்த்து வந்தார். தற்போது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இவருடைய மனைவி ஸ்ரீசுதா (39). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உண்டு.

ஸ்ரீசுதா சென்னையில் வேலை பார்த்து வருவதால் இவர்கள் அனைவரும் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் ஊரில் உள்ள வீட்டை உறவினர் சேகர் பராமரித்து வருகிறார். மேலும் காட்சன் அடிக்கடி ஊருக்கு வந்து வீட்டை பார்த்து விட்டு செல்வார்.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி உறவினர் சேகர் பிள்ளவிளைக்கு வந்து காட்சனின் வீட்டை பார்த்துவிட்டு சென்றார். பின்னர் நேற்று மதியம் உறவினர் மீண்டும் காட்சனில் வீட்ைட பார்க்க வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

30 பவுன் நகை கொள்ளை

அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், மாடியில் அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன.

இதுகுறித்து உறவினர் சேகர் சென்னையில் உள்ள காட்சனுக்கும், குளச்சல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

உறவினர் சேகர் கடந்த 5-ந் தேதி கடைசியாக பிள்ளவிளை வந்து காட்வின் வீட்டை பார்த்து சென்றார். அன்றிரவு பக்கத்து வீட்டில் மோட்டார் சைக்கிள் மேல் வைத்திருந்த புதிய ஹெல்மெட்டை மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு பழைய ஹெல்மெட்டை வைத்து சென்றுள்ளனர். எனவே 5-ந் தேதி இரவு கொள்ளை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பரபரப்பு

இதற்கிடையே தகவல் அறிந்த காட்சன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஊருக்கு வந்த பின்புதான் கொள்ளை போன பொருட்களின் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். ஆளில்லாத வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்