விற்பனைக்கு வைத்திருந்த 30 லிட்டர் கலப்பட தேன் அழிப்பு
பர்லியாறு முதல் கூடலூர் வரை சோதனை நடத்தி, விற்பனைக்கு வைத்திருந்த 30 லிட்டர் கலப்பட தேன
கூடலூர்,
பர்லியாறு முதல் கூடலூர் வரை சோதனை நடத்தி, விற்பனைக்கு வைத்திருந்த 30 லிட்டர் கலப்பட தேனை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனர்.
அதிகாரிகள் சோதனை
நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இதை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையோரங்களில் தேன் உள்பட கலப்பட பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பர்லியாறு தொடங்கி ஊட்டி, நடுவட்டம், கூடலூர் ஊசிமலை காட்சி முனை வரை ரோந்து சென்றனர்.
அப்போது பல இடங்களில் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களில் தேன் விற்றதை பார்த்தனர். தொடர்ந்து தேனை பரிசோதனை செய்தனர்.
கலப்பட தேன் அழிப்பு
அப்போது விற்பனைக்கு வைத்திருந்தது கலப்படம் செய்த தேன் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 30 லிட்டர் கலப்பட தேனை பறிமுதல் செய்து உடனடியாக அழித்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் வைத்திருந்த கெட்டுப்போன தேன் அடைகளையும் அழித்தனர். பின்னர் கலப்பட தேனை விற்பனைக்காக கொண்டு வந்த கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த அருண், தவகுமார், தனுஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இனிவரும் நாட்களில் கலப்பட தேன் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, தேன் மட்டுமின்றி கலப்பட பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.