ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்; போலீசாருக்கு பாராட்டு
நெல்லை மாவட்டத்தில் ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது;
தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் உட்கோட்டத்தில் உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கடந்த 15-ந்தேதி ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தியவர்களை கைது செய்தனர். மேலும் அம்பை பகுதியில் கடந்த 18-ந் தேதி காரின் டயருக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பிடிபட்ட வழக்கில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், வாசுதேவன், இளையராஜா, சிவகுமார் மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி ஊக்குவித்தார். மேலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.