புளியந்தோப்பில் போலீஸ் வாகன சோதனையில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது

புளியந்தோப்பில் போலீஸ் வாகன சோதனையில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைதானார்கள். மகளின் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய தந்தையும் சிக்கினார்.;

Update: 2023-06-30 09:03 GMT

துப்பாக்கிகளுடன் சுற்றினர்

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் சந்திப்பு அருகே புளியந்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்தனர். அவர்களிடம் 2 துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்குஜார் (வயது 26), சோனு (22), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கசிப் (23) என்பது தெரியவந்தது. இதில் முகேஷ்குஜார் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

மகள் காதலுக்கு எதிர்ப்பு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிபால் சிங் (42) என்பவர் சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகரில் வசித்து வருகிறார். ராஜஸ்தானில் வசிக்கும் இவருடைய 16 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்தர் என்ற பவேஷ் என்பவரை காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் அறிந்த மணிபால் சிங், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மகளை ராஜஸ்தானில் இருந்து சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். இதையறிந்த அந்த பெண்ணின் காதலனான ராஜேந்தர், கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்து தனது காதலியை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிபால் சிங், உறவினர்களுடன் ராஜஸ்தானுக்கு சென்று காதலனுடன் இருந்த மகளை பிரித்து மீண்டும் சென்னை அழைத்து வந்துவிட்டார்.

கொலை செய்ய சதி

மேலும் தனது மகளை அழைத்துச்சென்ற ராஜேந்தரை தீர்த்துகட்ட மணிப்பால் சிங் முடிவு செய்தார். இதற்காக தனக்கு நெருக்கமான சவுகார்பேட்டையைச் சேர்ந்த உபேந்தர் சிங் (41) மற்றும் மோகன் சிங் (33) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி முகேஷ் குஜார் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தனர். இதற்கு முன்பணமாக மணிப்பால் சிங் ரூ.1 லட்சத்தை கொடுத்து ராஜேந்தரை கொலை செய்ய துப்பாக்கி வாங்கி கொள்ளும்படி முகேஷ் குஜாரிடம் கூறினார்.

இதையடுத்து முகேஷ் குஜார், சோனு, கசிப் ஆகிய 3 பேரும் உத்தரபிரதேசம் சென்று கள்ளச்சந்தையில் 2 துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டக்களை வாங்கினர். மேலும் சென்னை வந்து மணிபால் சிங்கை சந்தித்து செலவுக்கு பணம் வாங்க வந்தபோது போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து புளியந்தோப்பு போலீசார், மணிபால் சிங், உபேந்தர் சிங், மோகன் சிங் மற்றும் பிடிபட்ட முகேஷ் குஜார், சோனு, கசிப் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்