போலீசாரை தாக்கிய 3 வாலிபர்கள் சிக்கினர்
சரவணம்பட்டியில் போலீசாரை தாக்கிய 3 வாலிபர்கள் சிக்கினர்
சரவணம்பட்டி
கோவை-சத்தி சாலை சரவணம்பட்டியில் உள்ள சோதனை சாவடியில் போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்காரர் விஜயகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது வாலிபர்கள் 3பேரும் சேர்ந்து போலீஸ்காரர் மணிகண்டனை தாக்கிவிட்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் போல் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரரை தாக்கியது தென்காசி மாவட்டம் வடகரையை சேர்ந்த அய்யப்பன் என்ற அசோக் (வயது 23), தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சிவா (26), கார்த்தி (22) என்பதும், அவர்கள் கோவையில் தங்கியிருந்து உணவு மற்றும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.