3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் தொழிலாளி கொலைவழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி ராயப்பன். இவருடைய மகன் சார்லஸ் (வயது 48). தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சின்னமணி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (39), மாரியப்பன் மகன் அஜய் (19) மற்றும் எட்டையபுரம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அக்கநாயக்கர் மகன் குருசாமி (38) ஆகிய 3 பேரையும் தூத்துக்குடி தென்பாகம்போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம்
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சின்னமுத்து, குருசாமி, அஜய் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உள்பட 259 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.