தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

கோவில்பட்டியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-13 17:29 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் வழிப்பறி

கோவில்பட்டியை அடுத்த விஜயாபுரி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் கற்பகராஜ் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் தீத்தாம்பட்டியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் வழிமறித்து கற்பகராஜ் மனைவி குருலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 4 கிராம் கம்மலை பறித்துச் சென்றனர்.

இதேபோல் நாகம்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவராமச்சந்திரன் (29). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்கு திரும்பினார். கரிசல்குளம் ஊருக்கு வடபுறம் சென்றபோது, மர்ம நபர்கள் வழிமறித்து சிவராமச்சந்திரன் மனைவி வசந்தகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் கம்மல், 3 கிராம் காதுமாட்டி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் (67), அவருடைய மனைவி பார்வதி (58) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றனர்.

அஞ்சல் அலுவலகம் அருகே எதிரே வந்த மர்மநபர், பார்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 2.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

இதுகுறித்து 3 பேரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர், கொப்பம்பட்டி, கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்தநிலையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் இளையரசனேந்தல் ரோடு சித்திரம்பட்டி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார் (32), அய்யனேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் (19), நாலாட்டின்புத்தூர் மொட்டை மலையைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சிரஞ்சீவி (20) ஆகியோர் என்பதும், அவர்கள் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 7.5 பவுன் தங்க நகைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்