ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
விளாத்திகுளம் பகுதியில் ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் ஆடுகள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் புதுக்காலனியில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் ஏராளமான செம்மறி ஆடுகளை வைத்து, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர், ஆங்காங்கே விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை போடுவது வழக்கம். தற்பொது மூர்த்தி தனது ஆடுகளை வைத்து சென்னம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவில் மூர்த்தி தனது ஆட்டுக்கிடையில் ஆடுகளை அடைத்து விட்டு, அவரும், அவரது சித்தப்பா பாலமுருகனும், விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் உள்ள வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு ஆட்டுக்கிடைக்கு திரும்பி வந்து தூங்கியுள்ளனர்.
3 பேர் கைது
மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது 2 ஆடுகளின் கால்கள் கட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி ஆடுகளை எண்ணி பார்த்த போது 10 ஆடுகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சுப்புலாபுரத்தை சேர்ந்த விஜய்(வயது 29), குளக்கட்டான்குறிச்சியை சேர்ந்த முத்து(32), புதூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்(23) ஆகியோர் ஆட்டுக்கிடையில் 10 ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதையெடுத்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தொடர்ந்து 5 நாட்களாக தினமும் தலா 2 ஆடுகள் வீதம் அவர்கள் திருடி சென்றதும், அடுத்த நாளும் மேலும் 2 ஆடுகளை திருட முயற்சித்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.
இதே போன்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் ஆடுகளை திருடி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.