விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கையெழுத்தை மோசடியாக போட்டு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுமலை கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-09-07 15:17 GMT

தளி

கையெழுத்தை மோசடியாக போட்டு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விவசாயி

உடுமலை தாலுகா மசக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது54). விவசாயி. இவர் தனது நண்பரான உடுமலையில் வசித்து வரும் சரஸ்வதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி அசல் பத்திரத்தை பெற்றுச் சென்று உள்ளார். அதைத் தொடர்ந்து சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் கடன் விஷயமாக கேட்டுள்ளனர். அதற்கு அவர் வங்கியில் கொடுத்தாகிவிட்டது விரைவில் கடன் கிடைத்துவிடும் என்று தெரிவித்து உள்ளார்.

அதன் பின்பு எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சரஸ்வதியின் பெயருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதில் பெரியசாமி வாங்கிய கடனுக்கு சரஸ்வதி ஜாமின் கையெழுத்து போட்டுள்ளதாகவும், நிலுவை கடனை செலுத்துமாறும் தெரிவித்து இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, ராணி ஆகியோர் பெரிய சாமியிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.அதற்கு அவர் நான் வாங்கிய கடனை கட்டி உங்கள் பத்திரத்தை மீட்டு கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் காலம் கடந்தும் அவர் சொன்னபடி பத்திரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து ராணியும் சரஸ்வதியும் பெரியசாமியிடம் உடனடியாக பத்திரத்தை மீட்டுத் தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ராணியையும், சரஸ்வதியும் மிரட்டி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

3 ஆண்டு சிறை

இது குறித்து ராணி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அந்த வழக்கு உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது.அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.விசாரணை -முடிவற்ற நிலையில் நேற்று மாஜிஸ்திரேடு ஆர்.மீனாட்சி தீர்ப்பளித்தார். அதில் கையெழுத்தை மோசடியாக போட்டு கடன் பெற்ற குற்றத்திற்காக பெரியசாமிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

----------------

Tags:    

மேலும் செய்திகள்