ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு சிறை; திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு சிறை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update: 2023-07-13 20:16 GMT

ரூ.500 லஞ்சம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடந்த 2008-ம் ஆண்டு பணிபுரிந்து வந்தவர் நல்லையன். இவருக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்த வகையில் சம்பளமாக ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் வர வேண்டியிருந்தது. இதனை பெற லால்குடி சார்நிலை கருவூலத்தை 2008-ம் ஆண்டு நல்லையன் அணுகினார்.

அப்போது அங்கு கணக்காளராக பணிபுரிந்து வந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 62) ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி கொடுக்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுபற்றி நல்லையன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் 15-3-2008 அன்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந்தேதி லால்குடி சார்நிலை கருவூலத்தில் நல்லையனிடம் இருந்து கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ.500 லஞ்சம் வாங்கிய போது, அப்போதைய லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அம்பிகாபதி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

3 ஆண்டு தண்டனை

அதில், கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்கியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கை திறம்பட விசாரித்து சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர் செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசாரை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்