விவசாயியை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை
விவசாயியை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள மாடக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ்(வயது 55). இவருடைய அண்ணன் பாலு (60). இவர்களுக்கு சாத்தமங்கலத்தில் தட்டார காளியம்மன் கோவில் குலதெய்வமாக உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவதில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பாலு தரப்பினர் கனகராஜ் மற்றும் பாண்டி ஆகியோரை தாக்கினர். இது குறித்து பாலு, விக்னேஷ் (32), சரவணன் (32), முருகையா (32), தினேஷ் (30), மகேஸ்வரி (55) ஆகிய 6 பேர் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து, குற்றம் சாட்டப்பட்ட விக்னேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், முருகையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்வேலவன் ஆஜராகினார்.