தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை
ஆளூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திங்கள்சந்தை:
ஆளூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முன்விரோதம்
இரணியல் போலீஸ் சரகம் ஆளூர் அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர் அய்யாகுட்டி நாடார். இவருடைய மகள் பொன்நேசம். இவருக்கும் ஆளூர் புன்னவிளையை சேர்ந்த ெகாத்தனாரான வைகுண்டமணி (வயது43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 12-5-2004 அன்று வைகுண்டமணி பொன்நேசத்தின் வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டின் கதவுகளை அடித்து உடைத்தார். இதை பொன்நேசத்தின் தம்பி தங்கபாண்டியன் தட்டி கேட்டார். இதனால் தொழிலாளி தங்கபாண்டியனுக்கும் வைகுண்டமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வைகுண்டமணி அரிவாளால் தங்கபாண்டியனை சரமாரியாக வெட்டினார்.
இதில் அவரது முதுகு, கால் போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
3 ஆண்டு சிறை
இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வைகுண்டமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமீர்தீன் தீர்ப்பு அளித்தார்.
அதில் வைகுண்டமணிக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைகுண்டமணியை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.