மழைநீர் வடிகால்வாய் பணியின்போது மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் படுகாயம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மழைநீர் வடிகால்வாய் பணியின்போது மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஐ.சி.எப். பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று மதியம் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியில் செல்லும் மின்சார கேபிள் பொக்லைன் எந்திரத்தில் சிக்கி சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் அரக்கோணத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 35), கொளத்தூரை சேர்ந்த கண்ணன் (50), செஞ்சியை சேர்ந்த அருண்குமார் (27) ஆகிய 3 பேரும் மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்துக்குள் இறங்கி, வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள், அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
அதனை சரி செய்து, மீண்டும் மின்வினிேயாகம் செய்யப்பட்டது.இது தெரியாமல் மழைநீர் வடிகால்வாய்க்கு தோண்டிய பள்ளத்துக்குள் சேதம் அடைந்த மின்கேபிள் அருகே பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் 3 பேரையும் மின்சாரம் தாக்கியது. அத்துடன் மின்கசிவால் கேபிள் தீப்பிடித்து எரிந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த 3 பேரும் உயிருக்கு போராடினர். உடனடியாக 3 பேரையும் கீழ்ப்பக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.