எழுமலை அருகே கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது - 22 கிலோ கஞ்சா பறிமுதல்
உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் ரோந்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எழுமலை அருகே மானூத்து அருகில் மொட்டைப்பாறை முனியாண்டி கோவில் பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக சாக்கு மூடைகளை சுமந்து வந்த 3 பெண்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் சுமந்து வந்த மூடைகளை பிரித்து சோதனையிட்டனர்.
3 பெண்கள் கைது
அந்த மூடைகளில் சுமார் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் மானூத்து கிராமத்தை சேர்ந்த பவுன்தாய் (வயது 56), பிரபாவதி (35), பேச்சியம்மாள் (46) என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து மலை அடிவார பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.