3 பெண்களிடம் பணம், செல்போன் திருட்டு
அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.
பணம் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் தேவி. இவருடைய மகள் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருப்புக்கோட்டை வந்த தேவி தனது மகளை அழைத்துக்கொண்டு மகளின் சம்பள பணம் ரூ.7 ஆயிரத்துடன் ஊர் திரும்புவதற்காக புதிய பஸ் நிலையம் வந்து சாயல்குடிக்கு பஸ்சில் ஏறினார்.
அப்போது தனது கையில் இருந்த பையை பார்த்த போது அதிலிருந்த பணம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே பஸ்சில் ஏறிய சிவகாசியை சேர்ந்த விஜி கைப்பையை பார்த்தபோது பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புடைய செல்போன் மற்றும் ரூ.800 காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
மேலும் ஒரு மூதாட்டியிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மாயமானது. மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் 3 பெண்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
பணத்தை இழந்த பெண்கள் பஸ் நிலையத்தில் நின்று அழுத சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.