மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள்; கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் உட்பட 371 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர வண்டிகளும், 2 பேருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகளும் கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.