கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு மினி லாரியில் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
ரகசிய தகவல்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை சேர்ந்த நாடு சாலையில் வந்து கொண்டிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. பின்னர் சந்தேகத்தின் பேரில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது.
2 பேர் கைது
இதையடுத்து மினி லாரியில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் கள்ளக்குறிச்சி சித்தலூரை சேர்ந்த அய்யப்பன்(வயது 20). அவருக்கு உதவியாக வந்தவர் அதே பகுதியை சேர்ந்த ராவுத்தன்(20) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அய்யப்பன் உள்பட 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.