3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-21 17:13 GMT

திண்டுக்கல்லில், பழனி புறவழிச்சாலையில் உள்ள குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பழனி புறவழிச்சாலையில் உள்ள குடோன்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கொட்டப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் மூட்டை, மூட்டையாகவும், அட்டைப்பெட்டிகளிலும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், பேப்பர்கள் ஆகியவை 3 டன் அளவில் (3 ஆயிரத்து 82 கிலோ) பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளாஸ்டிக் பொருட்களை குடோனில் பதுக்கி வைத்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனந்தராமன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் குடோனையும் பூட்டி 'சீல்' வைத்தனர்.

இதேபோல், குடோனை ராஜஸ்தான் மாநில வாலிபருக்கு வாடகைக்கு விட்ட கட்டிட உரிமையாளருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மாநகராட்சி பகுதியில் அடிக்கடி சோதனை நடத்தப்படும். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளிலோ, குடோன்களிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்