3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்: சிலைகள், கலைப்பொருட்களை வடிவமைத்து அசத்தல்

3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நேற்று தொடங்கியது

Update: 2022-12-06 18:45 GMT

கலைத் திருவிழா

தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி அளவிலான கலைத் திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடந்தது. தேனி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

அதில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வட்டார அளவிலான கலைத்திருவிழா 29-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. அதில் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் என்ற அடிப்படையில் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

கலைப் பொருட்கள்

இதையடுத்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நேற்று தொடங்கியது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்வியியல் கல்லூரியிலும், 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா நடக்கிறது.

பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதன் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

களிமண், வண்ணக் காகிதம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கலைப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல், கட்டுரை போட்டி, வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக களிமண், காய்கறி போன்றவற்றை கொண்டு கலை நயமிக்க சிலைகள், பொருட்களை வடிவமைத்தனர். மாணவர்கள் சிலர் மணற்சிற்பமும் செய்து அசத்தினர்.

வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. அதில் சிறந்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் மற்றும் கலையரசன், கலையரசி என்ற பெயர்களில் விருதுகளும் வழங்கப்படும். மேலும், மாநில அளவில் தரவரிசையில் முதல் 20 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்