மாநிலம் முழுவதும் நடந்த 'லோக் அதாலத்'தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன - சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார்.;
தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மாநில அளவில் 'லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தும்படி தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாநிலம் முழுவதும் 'லோக் அதாலத்'தை தமிழ்நாடு மாநில சட்டப் பணி ஆணை குழு நடத்தியது.
இதுகுறித்து மாநில சட்டப்பணி ஆணை குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறியதாவது:-
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா உத்தரவின்படி, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேற்பார்வையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும் அமைக்கப்பட்டன. இதுபோல, மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் என்று மொத்தம் 149 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த நீதிபதிகள் காசோலை மோசடி வழக்கு, சிவில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்பினரிடமும் சமரசம் பேசி மொத்தம் 3 ஆயிரத்து 949 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 131 கோடியே 96 லட்சத்து 26 ஆயிரத்து 174 ரூபாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.