3 வாலிபர்கள் பலி; 5 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிளில் மோதி வயலுக்குள் கார் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-19 18:35 GMT

பனைக்குளம், 

மோட்டார் சைக்கிளில் மோதி வயலுக்குள் கார் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கலையனூரைச் சேர்ந்தவர், சவுந்தர்ராஜன். வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் நீதிராஜன் (வயது 23). தந்தையின் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ேமாட்டார் சைக்கிளில் நீதிராஜன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவிபட்டினம் அருகே பெருவயல் ஆர்ச் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ெசல்வதற்காக ஒரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக நீதிராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அந்த காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

வயலுக்குள் பாய்ந்தது

பின்னர் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வயலுக்குள் பாய்ந்தது.

அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் நீதிராஜன் தூக்கி வீசப்பட்டார். அந்த மோட்டார் சைக்கிளானது, அந்த நேரத்தில் அங்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த கலையனூரை சேர்ந்த கருணாநிதி (30), ஸ்ரீதர் (32) ஆகியோர் மீது விழுந்ததில் அவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நீதிராஜன், காரில் இருந்த பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் காரின் டிரைவர் வெங்கட்ராமன் (20), அதில் இருந்த பிரவீன்குமார் (19), கார்த்திக் ராஜா (18), அர்ஜூனன் (18) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஒருவர் பலி

த,மு,மு.க. சார்பில் அனுப்பி வைத்த ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு காயம் அடைந்த 6 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆனது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, காரில் மொத்தம் 5 பேர் வந்துள்ளனர். அவர்களில் டிரைவர் வெங்கட்ராமனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கருப்புகொடிபட்டி சொந்த ஊராகும். மற்ற 4 பேரும் பொன்னமராவதி வி.நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரும் உறவினர்கள். ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்த அவர்கள் ஊருக்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்