3 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்

நாகையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-18 19:15 GMT

நாகையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்முதல் நிலையங்கள்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 74 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 54 ஆயிரத்து 250 டன் அரவைக்கும், குடோன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 793 டன் கொள்முதல் நிலையங்களில் இருப்பு உள்ளது. அந்த நெல் மூட்டைகளையும் குடோன்களுக்கு அனுப்ப துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த 14-ந் தேதி வரை ரூ.150 கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே நுகர்பொருள் வாணிபக்கழகம் விவசாயிகளுக்கு எந்தவித காலதாமதமும் இன்றி கொள்முதல் செய்வதுடன், பணமும் அவ்வப்போது செலுத்தப்பட்டு வருகிறது.

பணியிடை நீக்கம்

மேலும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவது தொடர்பாக வந்த புகாரின் பேரில், ஆயக்காரன்புலத்தில் ஒருவரும், திருப்பயத்தாங்குடியில் 2 பேரும் என கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த 3 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கையூட்டு தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கொள்முதல் நிலையங்களை விஜிலென்ஸ் பிரிவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே விவசாயிகள் எந்தவித பணமும் வழங்காமல் கொள்முதல் நிலையங்களில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்