தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது

வேப்பந்தட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-09 17:43 GMT

வேப்பந்தட்டை 

தொடர் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெயராமன்(வயது 65), மலர்கொடி(60) ஆகியோரது வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வேப்பந்தட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் என்பவரது வீட்டில் திருடிக் கொண்டு இருந்தபோது, பொதுமக்கள் திருடனை மடக்கி பிடித்து வேப்பந்தட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(27) என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

பின்னர் அவனிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஆத்தூரை சேர்ந்த சரவணன் (40), ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(40) ஆகிய இருவருடன் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வெங்கடேசன், சரவணன், ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்