நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
கணபதி மாநகரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.
கணபதி
கோவை கணபதி மாநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் இளங்கோ. ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 66). இவர் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி நேற்று காலை 6 மணியளவில் ஜெயலட்சுமி நடைபயிற்சி சென்றார்.
இவர் கணபதி-விளாங்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து ஜெயலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.