காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது
மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.;
கோட்டூர்;
மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் தெருவுக்கு நேற்று முன்தினம் பட்டப்பகலில் 3 பேர் காரில் வந்தனர். காரில் இருந்து இறங்கிய 3 பேரும் திடீரென அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை பிடித்து காரில் ஏற்றினர்.பின்னர் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரட்டி பிடித்தனர்
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீமதி, உதயகுமார் மற்றும் போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் காரை விரட்டி சென்றனர்.திருவாரூா் சாலை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே காரை மடக்கி பிடித்த போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அராபத்(வயது 28), ஆறுமுகம்(50) செல்வராஜ்(55) என்பதும், அவர்கள் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து 4 ஆடுகளை மீட்டனர். மேலும் அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு காரில் வந்து ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.