உரிமையாளரை திட்டி ஓட்டலை சூறையாடிய 3 பேர் கைது

பண்ருட்டி அருகே மாமூல் தர மறுத்த உரிமையாளரை திட்டி ஓட்டலை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-14 18:21 GMT

பண்ருட்டி, 

மாமூல் கேட்டு மிரட்டல்

பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன் (வயது 41). தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ள இவர் பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அரங்கநாதன் ஓட்டலில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

ஓட்டல் சூறை

இதனால் ஆத்திரமடைந்த 7 பேர் கொண்ட கும்பல் அரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை ஆபாசமாக திட்டி, ஓட்டலில் இருந்த பொருட்களை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து அரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலை சூறையாடி நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வடக்குத்து, தோப்புக்கொல்லை, சிறு தொண்டமாதேவி ஆகிய கிராமங்களை சேர்ந்த ராகவன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு ஓட்டலை சூறையாடியது தெரியவந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

இதையடுது்து வடக்குத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகன் கார்த்தி என்கிற ராகவன், தோப்புக்கொல்லையை் சேர்ந்த மூர்த்தி மகன் கவியரசன், சீதாராமன் மகன் ரஞ்சித் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சிறு தொண்டமா தேவி கிராமத்தை சேர்ந்த 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்