திருவெறும்பூர் அருகே உள்ள விளங்கினாங்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் ஹரிகரன்(வயது 51). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார். இவரது மனைவி ஆண்டாள் வேளாண் துறையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஹரிகரனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் நஷ்டம் ஏற்பட்டதோடு, கடனும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த ஹரிகரன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டாள் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு நவல்பட்டு போலீசார் சென்று ஹரிகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேேபால் துறையூரில் உள்ள நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி சஞ்சயா(25). கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு சஞ்சயா தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சஞ்சயா உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாத்தலை அருகே உள்ள சித்தாம்பூரை அடுத்த அய்யங்குளத்துப்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(40). விவசாயியான இவருக்கும், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை அடுத்த மூவராயன்பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும் திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பூக்கடையில் வேலை பார்த்து வரும் மூவராயன்பாளையம் மேலூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்பவரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் 2 பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் சங்கிலியை கேட்டபோது, அவற்றை தருவதாக கூறி சதீஷ்குமார் காலதாமதம் செய்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று இதுகுறித்து கேட்பதற்காக சக்திவேல், சதீஷ்குமாரை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததை கண்ட சக்திவேல், தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மன உளைச்சலில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு மூவராயன்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.