கஞ்சா வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேர் கைது
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று முன்தினம் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்த போது அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில், கஞ்சாவுடன் சிக்கியவர் தூத்துக்குடி மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்த கவுதம் (வயது 19) என்பது தெரியவந்தது. கவுதம் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்து விட்டு தற்போது நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவருடைய தந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
கவுதம் தூத்துக்குடியை சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து கவுதமை கைது செய்தனர். மேலும் ராஜா மீதும் போலீசார் வழக்குப்பதிவு அவரை தேடிவருகின்றனர்.
மேலும் 2 பேர் சிக்கினர்
இதேபோல் புத்தேரி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், கீழப்புத்தேரியை சேர்ந்த மதுசூதனன் (19) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பணகுடியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.