மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
சிறுபாக்கத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சிறுபாக்கம்
துணிகளை காய வைத்தபோது...
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமர்(வயது 55). இவரது மனைவி பெரியம்மாள் நேற்று முன்தினம் இரவு துணிகளை துவைத்து அவற்றை வீட்டின் அருகே இரும்பு கம்பியாலான கொடியில் காய வைப்பதற்காக போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் ராமர், மகன் மணிகண்டன்(30) ஆகியோர் பெரியம்மாளை காப்பாற்ற முயன்றபோது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ராமர், மணிகண்டன் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
படுகாயம் அடைந்த பெரியம்மாள் விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இரும்பு கம்பியில் மின் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என உடனடியாக தெரியவில்லை. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும், தாயை காப்பாற்ற முயன்ற மகனும் பலியான சம்பவத்தால் சிறுபாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மற்றொரு சம்பவம்
அதேபோல், சிறுபாக்கம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(68). இவர் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை காலால் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.