மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-07-06 19:47 GMT

உரிமம் வழங்க லஞ்சம்

திருச்சி உறையூர் நவாப்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவர் மருந்து மொத்த வியாபாரம் நடத்த உரிமம் கேட்டு கடந்த 2008-ம் ஆண்டு மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் பார்த்திபன், முதுநிலை மருந்து கட்டுப்பாட்டு இன்ஸ்பெக்டர் சிவபுண்ணியம் ஆகியோரிடம் விண்ணப்பித்து இருந்தார். அப்போது உரிமம் வழங்க பார்த்திபன் ரூ.5 ஆயிரமும், சிவபுண்ணியம் ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.

அந்த தொகையை ஒரு மெடிக்கலில் பணியாற்றி வந்த சேகர் என்பவரிடம் கொடுக்க கூறினார்கள். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பரசு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசாரின் அறிவுரையின்பேரில், அன்பரசு லஞ்சப்பணத்தை சேகரிடம் கொடுத்தபோது, அங்கு பதுங்கி இருந்த போலீசார் சேகர், உதவி இயக்குனர் பார்த்திபன், மருந்து கட்டுப்பாட்டு இன்ஸ்பெக்டர் சிவபுண்ணியம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

சிறை தண்டனை

இவர்கள் மீதான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பார்த்திபன், முதுநிலை மருந்து கட்டுப்பாட்டு இன்ஸ்பெக்டர் சிவபுண்ணியம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும், சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதில் பார்த்திபன் (வயது 62) மற்றும் சிவபுண்ணியம் (70) ஆகியோர் மீது கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் 2001 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்