கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

வேடசந்தூர் அருகே கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-16 17:08 GMT

தனியார் பஸ் கண்டக்டர்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 29). இவர், ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் இடையே இயக்கப்படுகிற தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வேடசந்தூர் பஸ்நிலையத்துக்கு அந்த பஸ் வந்தவுடன், கீழே இறங்கி செல்வராஜ் நடந்து சென்றார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.

அதன்பிறகு மாற்று கண்டக்டர் மனோஜ் பணியமர்த்தப்பட்டு, வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அந்த பஸ் புறப்பட்டது.

கண்ணாடி உடைப்பு

வேடசந்தூரை அடுத்த சேனன்கோட்டை அருகே பஸ் வந்தது. அப்போது செல்வராஜை தாக்கிய 3 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து பஸ்சை கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. டிரைவர் கதிரேசன் மற்றும் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வேடசந்தூரை சேர்ந்த விக்ரம் (21), வேடசந்தூர் கலைஞர் நகரை சேர்ந்த நவீன்பாரதி (20), அய்யம்பாளையத்தை சேர்ந்த கருணாகரன் (21) என்று தெரியவந்தது.

கல்லூரி மாணவர்கள்

இந்தநிலையில் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் 3 பேரும் பதுங்கி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். இதில் நவீன்பாரதி ஆட்டோ டிரைவர் ஆவார். விக்ரம், கருணாகரன் ஆகியோர் கல்லூரி மாணவர்கள்.

ஏற்கனவே அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த தங்களது நண்பர் காளிமுத்துவை வேலையை விட்டு நிறுத்தியதற்காக, டிரைவர் கதிரேசனை அவர்கள் தாக்கினர். இந்த வழக்கில் தாங்கள் சிறை செல்வதற்கு கண்டக்டர் செல்வராஜ் தீவிரமாக செயல்பட்டதாகவும், இதனால் ஜாமீனில் வெளியே வந்தவுடன் அவரை தாக்கி பஸ் மீது கல்வீசியதும் விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

----------

Tags:    

மேலும் செய்திகள்