போதை மாத்திரைகள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பொன்மலைப்பட்டி:
போதை மாத்திரைகள் விற்றனர்
திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன். இவர் நேற்று முன்தினம் அரியமங்கலம் சாமிநாதன் தெருவில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து போதை மாத்திரைகளை சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விற்றுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் உடனடியாக அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகள் விற்றவர்களை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகர் சாமிநாதன் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் கதிரேசன் என்ற கதிர்(வயது 21), திருவெறும்பூர் செல்வபுரம் 2-வது தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் தினகரன் என்ற தீனா(24), அவரது தம்பி கிரண் கிறிஸ்டோபர்(23) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீதும் மருந்து மற்றும் அழகு சாதன சட்டம், குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.