வெவ்வேறு விபத்தில் இலங்கை அகதி உள்பட 3 பேர் பலி
திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்தில் இலங்கை அகதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருக்கோவிலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா எலத்தூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் செல்வரத்தினம் (வயது 45). இவர் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திருக்கோவிலூர் புறவழிச்சாலை அய்யனார் கோவில் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராதவிதமாக செல்வரத்தினம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வரத்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரகண்டநல்லூர்
திருக்கோவிலூர் அருகே வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் விஷால் (12). இவன் ஆலம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தணிகைமலை மகன் தங்கபாண்டியன் (23) என்பவருடன் அருகில் உள்ள பில்ராம்பட்டு கிராமத்திற்கு முடிவெட்ட மோட்டார் சைக்கிளில் சென்றான். அங்குள்ள ஒரு கடையில் முடிவெட்டியதும், மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.மோட்டார் சைக்கிளை தங்கபாண்டியன் ஒட்டினார். காடகனூர்- பில்ராம்பட்டு சாலையில் ஏழுமலை என்பவர் நிலத்தின் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஷால், தங்கபாண்டியன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷால் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மற்றொரு சம்பவம்
சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் மகன் அனாஸ்தீன் (18). இவர் தனது அக்காவின் திருமணத்திற்கு புதுத்துணி எடுக்க சென்னைக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அனாஸ்தின் வடகீரனூர் கிராமத்தை சேர்ந்த தனது நண்பனான முகமதுயாசிக் மகன் முகமதுஷாபத்வுடன் (16) மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார். கள்ளக்குறிச்சியில் உள்ள துருகம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமதுஷாபத் பரிதாபமாக உயிரிழந்தான். காயமடைந்த அனாஸ்தீன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.