வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக், மாணவர் உள்பட 3 பேர் பலி
திருக்கோவிலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் மெக்கானிக், மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்
திருக்கோவிலூர்
மெக்கானிக்
திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகன் கணேஷ்(வயது 30). அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மணலூர்பேட்டைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.
மணலூர்பேட்டை-தியாகதுருகம் சாலையில் கூவனூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்
டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அஸ்வின்குமார்(15). திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அதே ஊரில் உள்ள கடையில் பால் பாக்கெட் வாங்கிவிட்டு கடலூர்-திருக்கோவிலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அஸ்வின்குமார் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோட்டார் சைக்கிள் மோதி பலி
கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). இவர் சம்பவத்தன்று இரவு அங்குள்ள சாலையில் வீ்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.