தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்
கார்-மோட்டார் சைக்கிள் மோதலில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆயக்குடி அருகே உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் மாயவன் (வயது 40). விவசாயி. அவருடைய மனைவி விஜயலட்சுமி (32). நேற்று இவர்கள் 2 பேரும், அமரபூண்டி-ஆயக்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ரூக்குவார்பட்டி அருகே, திண்டுக்கல்-பொள்ளாச்சி பைபாஸ் சாலையை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது கிணத்துக்கடவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாயவன், விஜயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரை ஓட்டி வந்த மணிகண்டனும் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.