சிறுவன் உள்பட 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 19). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் தமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி (20), இர்பான் மைதீன் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.