கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் உயிரிழந்த விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;

Update: 2023-05-17 07:24 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவரது மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தச்சு வேலை பார்த்து வந்த கிருஷ்ணமூர்த்தியுடன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல் (22) என்பவரும் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இதில் கானூரை சேர்ந்த கொத்தனார் பாலச்சந்திரன் (32) என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் வீட்டின் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது. இதில் செப்டிக் டேங்க் மேற்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக, செப்டிக் டேங்க் குழிக்குள் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சாரத்தை அகற்றுவதற்காக கடந்த 12-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக செப்டிக் டேங்க் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய துளை வழியாக உள்ளே இறங்கினர். செப்டிக் டேங்க் குழிக்குள் இறங்கிய மூன்று பேரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தாய் சரஸ்வதி குழிக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது 3 பேரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும் 4 வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்